பல்கலைகழக மாணவிக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த 26 வயதுடைய மாணவி முதுகலை 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக வேலை பார்க்கும் பிரேம்குமார் என்பவர் எனக்கு கடந்த ஓராண்டாக பாலியல் தொந்தரவு அளித்து வருகிறார். அந்த பேராசிரியர் சாதியை சொல்லி திட்டியதோடு, இரட்டை அர்த்தத்தில் பேசி வருகிறார்.
இதனை வெளியே கூறினால் தேர்வில் பெயிலாக்கி விடுவேன் என என்னை மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவி புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரேம்குமார் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் பிரேம்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.