நூற்றுக்கும் அதிகமான கிராமங்களில் நேற்று பிற்பகலில் இருந்து இரவு வரை சுமார் 7 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் இருக்கும் பள்ளிகொண்டா கிராமத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 1மணியளவில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின் தடை அருகிலிருந்த நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் ஏற்பட்டுள்ளது . பகல்.1 மணிக்கு சென்ற மின்சாரம் நீண்ட நேரம் ஆகியும் வராததால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தினால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஐஸ்கிரீம் கடைகளில் மின்சாரம் இல்லாததால் அனைத்தும் உருகி வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிகொண்டா பகுதியின் இளநிலை மின் பொறியாளரிடம் பொதுமக்கள் கேட்டபோது அவர் கூறியதாவது, ஆம்பூர் பகுதியின் வணிக வளாகம் மையப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் உயரழுத்த மின் பாதையில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இந்த பழுதை மின்வாரிய உழியர்கள் சரி செய்து வருவதால் மின் தடை செய்யப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு பரவக்கல் வழியாக வந்து கொண்டிருக்கும் மின்சார லைனில் இருந்து மின்னிணைப்பு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மின்சார விநியோகம் சரிசெய்யப்பட்டு இரவு 8 மணிக்கு அனைத்து கிராமங்களுக்கும் மின் சாரம் வழங்கப்பட்டுள்ளது.