குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் மேற்கு வங்க மக்கள், பிரதமர் மோடியை மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார். அக்கருத்துக்கு அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று இது குறித்துப் பேசிய ஜெக்தீப், ”பிரதமர் மோடி ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் மேற்கு வங்கத்தில் இருந்தார். மம்தா பானர்ஜி ஜனவரி 11ஆம் தேதி அவரைச் சந்தித்தார்.
பிரதமர் மோடி மேற்கு வங்க சாலைகளில் கால் வைக்க முடியாது என்று மம்தா தெரிவித்ததாக, அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எவ்வாறு இதனைத் தெரிவிக்க முடியும். இந்தக் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மம்தா தனது கருத்தை திரும்பப் பெறவேண்டும்” என்றார்.
முன்னதாக, பிரதமர் மோடி மேற்கு வங்கத்திற்கு வருகைதந்த அன்று, மேற்கூறிய சட்டங்களுக்கு எதிராக ராணி ராஸ்மோனி அவென்யூவில் திரிணாமுல் சாத்திர பரிசாத் நடத்திய உள்ளிருப்புப் போராட்டம்தான் ஆளுநரின் இந்தக் கோபத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.