நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி-கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கி வருகிறது. இதனிடையில் சுமார் 2 வருடங்கள் கழித்து பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளும் நேரடி முறையில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 2021-2022ஆம் கல்வியாண்டு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து இருப்பதால் மாநிலங்கள் தோறும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் செயல்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்தெலுங்கானாவில் காலை 7.30 மணிமுதல் மதியம் வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒடிசா மாநிலத்திலும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பள்ளிகளை மூடவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் எழுப்பப்பட்டது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் முழுவதுமுள்ள பள்ளிகளில் ஏப்ரல் 4 (இன்று) முதல் அரைநாள் மட்டும் வகுப்புகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ் தெரிவித்து உள்ளார். இது குறித்த அறிவிப்பில் தினசரி காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.