கார் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெலுங்குபாளையத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது தம்பதியினர் பெங்களூருவில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாமோதரன் தனது மனைவி, மாமனார் செல்வராஜ், மாமியார் இந்திரா ஆகியோருடன் காரில் சென்றுள்ளார். இவர்கள் திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த ஒரு ஆம்னி வேன் தடுப்பு சுவரில் மோதியதோடு எதிரே வந்த தாமோதரனின் கார் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி தாமோதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாமோதரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.