கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது மூன்று நண்பர்களுடன் காரில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் வால்பாறையை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது 7-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு வனப்பகுதியில் பாய்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் காரில் சிக்கி இருந்தவர்களை உடனடியாக மீட்டனர். இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.