சுற்றுலாத் தளங்களில் விடுமுறை தினத்தை ஒட்டி பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாத் தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இங்குள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் நேற்று விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி இருந்து காலை மாலை என இரு வேளைகளிலும் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இதனையடுத்து அருவியின் எதிரே அமைந்துள்ள பூங்கா மற்றும் அலங்கார நீர்வீழ்ச்சி ஆகியவற்றையும் மக்கள் பார்த்து ரசித்தனர்.
தற்போது கோதை ஆற்றில் தண்ணீர் குறைந்துள்ளதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைந்துள்ளது. இதனால் தண்ணீர் விழும் இடங்களில் சுற்றுலா பயணிகள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு குளித்தனர். இங்குள்ள அருவியின் மேற்பரப்பில் இருக்கும் தடுப்பணையில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதைத்தொடர்ந்து மாத்தூர் தொட்டிப்பாலத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்குள்ள தொட்டிப்பாலத்தின் ஒரு கறையிலிருந்து மற்றொரு கறைக்கு இயற்கை அழகை ரசித்துக் கொண்டே மக்கள் நடந்து சென்றனர். இந்தப் பாலத்திற்கு கீழ் இருக்கும் பரளியாற்றிலும் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர். இதேப்போன்று பத்மநாதபுரம் அரண்மனை, கடற்கரை போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.