பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் பகுதியில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம், தொட்டில் காவடி, அலகு காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதன் பின்னர் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ரமணி, அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் ரமணி, சீனிவாசன் ஆகியோர் செய்துள்ளனர். திருவிழாவிற்க்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வருவதால் பேருந்து வசதிகள் அதிகமாக செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு பணிகளில் 300-க்கு மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.