இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பிறகு அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின் அக்கடனை கட்ட முடியாமல் சிக்கித் தவித்தது. அதுமட்டுமல்லாமல் விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக உணவு பொருட்களின் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தததனால், வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது.
அதன்பின் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன் தினமும் பல மணிநேர மின்வெட்டும் நீடிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொழும்பில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு விகாரமஹாதேவி பூங்காவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது “அவர்கள் நாட்டைக் கொள்ளையடித்து விட்டார்கள். இந்த ஒருகுடும்பம் நம் பொருளாதாரத்தை அழித்து வருகிறது. எங்களுக்கு அமைதியான நாடு வேண்டும்” என்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.