வெளிநாடுகளைப் போல இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக மின்சாரம் வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகி உள்ள OLA மின்சார இருசக்கர வாகனத்தை சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அண்மையில் இந்த நிறுவனத்தின் மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப்போலவே வாகனத்திற்கு சார்ஜ் செய்தபோது வாகனம் வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் தீ விபத்துகளில் இருந்து இரு சக்கர வாகனங்களை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி நாம் பார்க்கலாம்.
மின்சார வாகனங்களை வாங்குவதற்கு முன்பு தயாரித்த நிறுவனம் வெளியிட்டுள்ள வாடிக்கையாளர் கையேட்டை படித்து, முன்னெச்சரிக்கை அறிவுரைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதனை போல பேட்டரியுடன் பொருந்தக்கூடிய பிராண்ட் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பவர்பேட்ச் வயர்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.
மின்சார வாகனத்திற்கான சார்ஜரை நேரடியாக சுவர் வழி மின்சார மெயின் போர்டில் மட்டுமே சொருக வேண்டும். வாகனம் சார்ஜ் செய்யும் போது எச்சரிக்கை ஒலி நீங்கள் கேட்கக்கூடிய இடத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாகனம் வெள்ளத்தில் சிக்கியிருந்தால் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். மின்சார வாகனத்தின் பேட்டரியை 5 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்ற வேண்டும்.
மேலும் மின்சார வாகனத்தின் தொழில் நுட்பம் ஒவ்வொரு ஆண்டிற்கும் மாறி வருகின்றது. இதை நாம் புரிந்து கொண்டு அதன்படி வாகனத்தைப் பராமரித்து வர வேண்டும். வாகனம் தீ பிடித்து விட்டால் அதை நாமே அணைக்க முயற்சி செய்யக் கூடாது. உடனே தீயணைப்புத் துறைக்குத் தெரிவித்து அந்த இடத்திலிருந்து தூரமாகச் சென்றுவிட வேண்டும்.