ஜூன் 1 முதல் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே கொண்டுவந்துள்ளது. ஊர் விட்டு ஊர் மாறி வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அன்றாட கூலிகள் நாட்டின் எந்த இடத்திலும் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆந்திரா, கர்நாடகம், கேரளம் மற்றும் மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா ராஜஸ்தான் தெலுங்கானா குஜராத் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இது நடைமுறையில் வந்துவிட்டதாக கூறியுள்ள மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ்,
வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் இத்திட்டம் நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட உள்ளதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனால் சுமார் 81 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்று கூறிய அவர், இந்தத் திட்டத்தில் அரிசி கிலோ 3 ரூபாய்க்கும் கோதுமை ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்காக அனைத்து நியாயவிலை கடை களிலும் மின்னணு சாதன உதவியுடன் ஆதார் விவரங்கள் சரிபார்க்க பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.