போத்தனூர் பகுதியில் காதல் மனைவியை கணவர் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், போத்தனூர் காமராஜ் நகரில் வசித்து வருபவர் ராமசாமி. இவருடைய மகன் 32 வயதுடைய நாகார்ஜுனன். இவர் அதே பகுதியில் வசித்து வந்த 27 வயதுடைய சர்மிளா என்ற பெண்ணை கடந்த பத்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின் சுந்தராபுரம் காந்திநகரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சர்மிளாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த நாகார்ஜுனன் சர்மிளாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிந்து நாகர்ஜுனனை கைது செய்துள்ளனர்.
அப்போது நாகார்ஜுனன் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், நாங்கள் இரண்டு பேரும் கடந்த பத்து வருடங்களாக காதலித்து நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். அதன்பின் சர்மிளா வேறு ஒரு நபரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து சந்தேகப்பட்டு எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்து நான் சர்மிளாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டேன். மனைவியைக் கொன்றதால் நானும் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். ஆனால் எனது முடிவை மாற்றிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினேன். அப்போது எனது மனைவியை கொன்று விட்டதாக அவர்களிடம் தெரிவித்தேன். இத்தகவலை அறிந்த காவல்துறையினர் என்னை மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.