நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. ஆனால் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும்அரசி தரமற்றதாக இருக்கிறது என மக்கள் நீண்ட காலமாக புகார் அளித்து வருகின்றனர். தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளுக்கு நுகர்வோர் வாணிபக் கழகத்திலிருந்து பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பொருள்கள் தரமற்றதாக இருந்தால் நியாயவிலைக் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் பொருட்களை திருப்பி அனுப்பி வைக்கலாம் என அரசு அறிவித்திருக்கிறது. இருப்பினும் நியாய விலைக்கடை ஊழியர்கள் அதை செய்வதில்லை. ஏனெனில் அவ்வாறு செய்தால் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் தரமற்ற பொருட்களாக இருப்பினும் அதை மக்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாட்களாக நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் குறிப்பாக கொட்டாரம், தேரூர், தோவாளை, அழகியபாண்டியபுரம், மருங்கூர், ஆரல்வாய்மொழி மற்றும் மேற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தரமற்ற அரிசி வழங்கப்படுகிறது. எனவே தேரூர் கிராம மக்கள் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர், கூட்டுறவு அதிகாரிகள், கூட்டுறவு சங்க இணை பதிவாளர்கள் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் நியாயவிலைக் கடைகளில் தரமான உணவு பொருள்கள் கிடைக்கும் என மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.