வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே புதுவீட்டுவிளை பகுதியில் ஷாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு அருகில் இருக்கும் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றுள்ளார். இவர் வீட்டிற்கு திரும்பி வரும் போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாம் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 1/2 பவுன் தங்க சங்கிலி மற்றும் 6,750 ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து திருவட்டார் காவல்துறைக்கு ஷாம் தகவல் தெரிவித்தார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.