ரஷ்ய நாட்டிற்காக உளவு பார்த்ததாக கூறப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நபர் ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கிறார்.
பெர்லினில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்தில் பாதுகாவலராக இருந்த டேவிட் ஸ்மித், பிரிட்டன் அதிகாரிகளின் பெயர்கள் உட்பட சில தகவல்களை ரஷ்ய உளவாளிகளிடம் கொடுத்து பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார். எனவே, அவரை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.
காவல்துறையினர் அவரின் வீட்டை சோதனை செய்தபோது, அங்கு ரஷ்ய நாட்டின் கொடி, சோவியத் ராணுவ தொப்பிகள், ரஷ்ய மொழியில் நிறைய புத்தகங்கள் போன்றவை கண்டறியப்பட்டது. தற்போது அவரை நாடு கடத்த தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் ஸ்மித் அதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அவரின் வழக்கறிஞர், ஸ்மித் 16 வருடங்களாக ஜெர்மனியில் வசித்து வருகிறார் என்றும், அவர் தன் தாய் நாடாக ஜெர்மனியை கருதுகிறார் என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். ஆனால் நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்து, தற்போது பிரிட்டனுக்கு அவரை நாடு கடத்த உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி பிரிட்டனுக்கு ஸ்மித்தை நாளை நாடு கடத்தி, வரும் வியாழக்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருக்கிறார்கள்.