இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப் பாட்டுக்கு எதிராக இயங்கும் யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் ஆகியவைகள் மீது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்ற டிசம்பர் மாதம் 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி மாதம் 35 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது. அதுமட்டுமல்லாமல் உளவுத் துறையின் பரிந்துரையின்படி நாட்டுக்கு எதிராக அவதூறு கருத்துக்களையும், போலி செய்திகளையும் வெளியிட்ட இணையதளங்கள், இன்ஸ்டாகிராம் கணக்குகள், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியதாக அறிவிப்பு வெளியாகியது.
அந்த அடிப்படையில் தேசிய பாதுகாப்பு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதால் மேலும் 22 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டு உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவற்றில் 18 யூ-டியூப் சேனல்கள் இந்தியாவிலிருந்தும், 4 யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானிலிருந்தும் இயங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர 3 ட்விட்டர் கணக்குகள், 1 பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளமும் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து தவறான தகவல்களை பரப்பியதால் எடுக்கப்பட்டு ள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.