1ம் வகுப்பு படிக்க சென்ற சிறுவனுக்கு ஒன்றரை லட்சம் லஞ்சம் கேட்ட பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த நெற்குன்றம், கிருஷ்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது மகனை அசோக் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ப்பதற்கு விண்ணப்பித்தார். அந்த சிறுவனை பள்ளியில் சேர்க்க முதல்வராக இருந்த ஆனந்தன் என்பவர் ஒன்றரை லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பள்ளியில் சேர்க்கும் போது ஒரு லட்சம் ரூபாயும், 15 நாட்களுக்கு பின் மீதமுள்ள 50ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திரன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் பள்ளி முதல்வர் ஆனந்தனை லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் பள்ளி முதல்வர் ஆனந்தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த அபராத தொகையில் 30 ஆயிரம் ரூபாயை புகார்தாரரான ராஜேந்திரனுக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.