இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசலின் விலையும் அதிகரித்துள்ளதால் மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக அந்த நாட்டுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பிரதமர் மகிந்த ராஜபக்சே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த கூட்டத்தின் முடிவில் இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் இலங்கை நாடாளுமன்றத்தில் இது குறித்த விவாதம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.