தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதற்குப் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் சென்னையில் 2000 அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும். பயணிகளில் முகங்களை அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்.
இந்த பணிகள் அனைத்தும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பாக ஜெர்மன் நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். எரிபொருள் உயர்வு காரணமாக மக்கள் பலரும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆங்காங்கே வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் எலக்ட்ரிக் பைக்குகள் ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து அறிக்கை அளிக்க போக்குவரத்து துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வர அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.