ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் விசைத்தறி தொழிலாளி குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள எரப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் விசைத்தறி தொழிலாளியான ராஜவேல்(40) என்பவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், பிரவீன்(19) என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் நாமக்கல் ஆட்சியர் நுழைவு வாயில் அருகே வைத்து திடீரென அவர்கள் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களை நல்லிபாளையம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த மனுவை பார்த்தபோது அதில், பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், ஊரை விட்டு துரத்த சூழ்ச்சி நடந்துள்ளதாகவும் இருந்துள்ளது. அதற்கு காரணமாக இருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் குடும்பத்தினரை சமாதனப்படுத்தி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.