உக்ரைனில் இருந்து அகதிகளாக 1.1 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் நல்ல அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
போரால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற உக்ரைனில் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளை நோக்கி 1.1 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் நல அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக மூன்று வாரங்களுக்கு பிறகு முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், வீடுகளை விட்டு வெளியேறியவர்களில் 75 லட்சம் பேர் உக்ரைன் உள்ளேயே உள்நாட்டு அகதிகளாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
மீதமுள்ள 40 லட்சத்திற்கும் மேலானவர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இது தவிர போர் காரணமாக மேலும் 29 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஐநா அகதிகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னதாக அந்த அமைப்பு கடந்த மாதம் மத்தியில் வெளியிட்ட அறிக்கையில் உக்ரைன் போர் காரணமாக 97 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அகதிகளாக இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.