தொழிலதிபர் வீட்டிற்குள் திருட்டு முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் ஜோனாதன் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்து வருகிறார். இவருடைய பெற்றோர் லுத்ரன் தெருவில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இறந்து விட்டதால் வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில் பணிப்பெண் ஒருவர் வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் மாடியில் இருக்கும் ஜன்னல் கம்பி வளைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பணிப்பெண் ஜோனாதன் டேனியலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இவர் உடனே வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் வீட்டில் நகை, பணம் ஏதும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இதுகுறித்து ஜோனாதன் டேனியல் நேசமணி நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே தெருவில் 2 நாட்களுக்கு முன்பாக மருத்துவரின் வீட்டில் 90 பவுன் நகை, பணம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.