கொண்டலாம்பட்டி அருகில் நிலப் பிரச்சனை காரணமாக செல்போன் டவரில் ஏறி நின்று முதியவர் போராட்டம் நடத்தினார்.
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அருகில் பெரியபுத்தூர் சக்தி கோவில் வடடத்தில் வசித்து வருபவர் சகாதேவன்(65). இவர் அந்தப் பகுதியில் உள்ள கரடு புறம்போக்கு நிலத்தின் அருகில் 40 வருடங்களுக்கு மேல் வசித்து வருகின்றார். சகாதேவன் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகின்றார். இவர் குடியிருந்து வந்த இடத்தின் அருகில் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவில் சகாதேவனின் முன்னோர்கள் வைத்தது.
இந்நிலையில் பெரியபுத்தூர் ஊராட்சி மன்ற தீர்மானத்தின் பேரில் சகாதேவன் பயன்படுத்தி வந்த புறம்போக்கு நிலத்தில் கீழ் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு ஊராட்சி மன்ற நிர்வாகிகள், தாலுகா அலுவலர்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அதற்கு சகாதேவன் எதிர்ப்பு தெரிவித்து தனக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் நீர்த்தேக்க தொட்டி கட்ட கூடாது என்று தகராறு பண்ணினார்.
அது புறம்போக்கு இடம் என்பதால் சகாதேவனின் வார்த்தைகளை மீறி நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்நிலையில் தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சகாதேவன் அந்தப் பகுதியில் இருக்கின்ற சுமார் 75 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறி நின்று போராட்டம் நடத்தினார். உடனே அங்கு இருந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் மற்றும் தாலுகா அதிகாரிகள் சகாதேவனிடம் இறங்கும்படி சொன்னார்கள்.
ஆனால் சகாதேவன் கீழே இறங்கி வரவில்லை. இதையடுத்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் அந்த இடத்திற்கு வந்து சகாதேவனை இறங்கி வரும்படி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனாலும் சகாதேவன் அதிகாரிகளின் பேச்சை கேட்காமல் மீண்டும் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி வந்தார்.
இதையடுத்து மறுபடியும் தீயணைப்பு வீரர்கள் வரவழைத்து அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க கீழே வலைகள் விரிக்கப்பட்டன. அதன்பின் நீண்ட நேரம் கழித்து இரவு 9 மணிக்கு சகாதேவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.