பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 2 ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால் ஊரடங்கு காரணமாக முழு பாடமும் மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை. இதனால் நடத்தாத பாடத்திலிருந்து கேள்விகள் வந்தால் என்ன செய்வது என்று மாணவர்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு சில பாடத் திட்டங்கள் முழுமையாக நிறைவு பெறாமல் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு நடத்தாத பாடங்களிலிருந்து மாணவர்களுக்கு கேள்விகள் கேட்கப்படாது என கூறியுள்ளார். இந்நிலையில் சென்னையில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அதில் ஒன்றிய அரசின் தேசிய கொள்கையை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறோம். தமிழ் நாடு வளர்ச்சியடைந்த மாநிலம் ஆகும். இங்கு தேசிய கல்வியை புகுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை அமைப்பதற்காக சிறந்த வல்லுநர்கள் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக சிறந்த பாடத்திட்டங்களை உருவாக்கும். அதன்பின் டெல்லியை போன்று தமிழகத்திலும் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால் தான் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். புதுடெல்லியில் 1500 பள்ளிகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் 36,000 பள்ளிகள் இருக்கிறது. இதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது. மேலும் டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஏப்ரல் 3-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவிருக்கிறார். இவர் தமிழகத்தில் இருக்கும் நமது பள்ளிகளை பார்வையிடும் போது அவரிடம் ஆலோசனை கேட்கப்படும் என கூறினார்.