ஹாங்காங் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கோடி மதிப்பிலான வைரக்கற்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ரயில்வே மேம்பாலம் அருகே கடந்த 2 ஆம் தேதி சூப்பிரண்டு சிறப்பு புலனாய்வு பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழக்கரையை சேர்ந்த யூசுப்சுலைமான் என்பவர் ஓட்டி வந்த காரில் 160.09 கிராம் (800 காரட் வைரக்கற்கள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் வைரகற்களை பறிமுதல் செய்து யூசுப்சுலைமானையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் கீழக்கரையை சேர்ந்த அக்தார் என்பவர் ஹாங்காங் நாட்டில் இருந்து வைரக்கற்களை வரவழைத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்களை பரிசோதனை செய்தபோது அது ஹாங்காங் நாட்டு மலைப்பாறைகளில் இருக்கும் வைர வகையை சேர்ந்தது என்றும் உறுதிசெய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் யூசுப்சுலைமான், அக்தார் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சுல்தான் என்பவர் மீதும் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்கள் சர்வதேச மதிப்பில் சுமார் 6 கோடி வரை இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.