சூப்பர் டெக் நிறுவனத்திடம் வீடு வாங்கியவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சூப்பர்டெக் நிறுவனம் திவால் ஆன காரணத்தினால் இந்த நிறுவனத்திடம் வீடு வாங்கிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அச்சத்தில் இருந்த நிலையில் சூப்பர்டெக் நிறுவனத்தில் எமரால்ட் கோர்ட் 40 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வீடு வாங்கியவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்தும்படி அந்த நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சூப்பர்டெக் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக வெளியான தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் உச்சநீதிமன்றத்தில் சூப்பர்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது . சூப்பர்டெக்கின் ட்வின் டவர்ஸ் குடியிருப்பில் மொத்தம் 716 பேர் வீடு வாங்கி உள்ளதாகவும், அதில் 652 பேருக்கு பணம் செலுத்தப்பட்டு விட்டதாகவும் சூப்பர் டேக் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இன்னும் ஐம்பத்தி ஒன்பது பேருக்கு 14. 96 கோடி ரூபாயை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதனால் சூப்பர்டெக் ட்வின் டவர்ஸில் வீடு வாங்கியவர்களுக்கு ஒட்டு மொத்த பணத்தையும் 12 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.