Categories
உலக செய்திகள்

இலங்கை: எதற்காகவும் அதிபர் பதவி விலக மாட்டார்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அந்நாட்டு மக்களை ஆத்திரமடைய செய்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே போன்றோர் பதவி விலகக்கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனிடையில் போராட்டத்தை ஒடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்ற 1ஆம் தேதி முதல் அவசர நிலையை அதிபர் பிறப்பித்தார். இதனையடுத்து இலங்கை மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்தனர். அதன்பின் புதிதாக 4 மந்திரிகளை மட்டுமே அதிபரால் நியமிக்க முடிந்தது. அவர்களில் ஒருவர் 24 மணிநேரத்திற்குள் ராஜினாமா செய்துவிட்டார். அனைத்து கட்சிகளும் இடம் பெற்ற தேசியஅரசு அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அதிபர் அழைப்பு விடுத்தார்.

எனினும் எதிர்க்கட்சிகள் அதனை ஏற்காமல் அதிபர் பதவிவிலக வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்ததால் திடீரென்று அவசர நிலையை அதிபரானகோத்தபய ராஜபக்சே ரத்து செய்தார். அவரது தலைமையிலான ஆளும் கூட்டணியிலிருந்து 42 எம்பிக்கள் விலகினர். பின் தனித்து செயல்பட போவதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்தது. ஆகவே அதிபர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறாது என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரசு தலைமை கொறடாவான ஜான்ஸ்டன் பெர்னாண்டோ என்ற மந்திரி கூறியதாவது, “கோத்தபயராஜபக்சே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஆவார்.

ஆகவே அவர் பதவிவிலகும் கேள்விக்கே இடமில்லை, எச்சூழ்நிலையிலும் ராஜினாமா செய்ய மாட்டார். இப்போதைய பிரச்சினைகளை எதிர்கொள்வார். இதனிடையில் அதிபர் மாளிகையையும், அரசு சொத்துகளையும் தாக்க முயற்சி நடந்ததால் தான் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறைகளுக்கு எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாதான் காரணம் ஆகும். இதனை அனுமதிக்க முடியாது, மக்கள், வன்முறைக்கு முடிவுகட்ட வேண்டும். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என்று அவர் பேசினார். இலங்கையில் நடைபெறுவதை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக ஐநா மனித உரிமை ஆணையரின் செய்தித்தொடர்பாளர் லிஸ் திரோசெல் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத சிக்கலுக்கு தீர்வுகாண அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார். மேமாத இறுதிக்குள் கூடுதல் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நார்வே, ஈராக், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 3 இலங்கை தூதரங்கள் மூடப்பட்டுள்ளது. ஆளும் கூட்டணியிலிருந்து விலகிய 42 எம்பிக்களில் ஒருவரான இடதுசாரி தலைவர் வாசுதேவ நாணயக்காரா, இலங்கையில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார். “அனைவரும் கலந்துகொள்ளக்கூடிய அரசு 6 மாதங்களுக்கு பதவி வகிக்க வேண்டும். அதன்பின் தேர்தல் நடத்த வேண்டும். அதுதான் பொருளாதார சிக்கலுக்கு முடிவுகட்ட ஒரே வழி” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |