சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரில் இருந்து 25 டன் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கர்நாடக மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை வேல்முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளுகுறுக்கி பேருந்து நிறுத்தம் அருகே இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென லாரியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த ஓட்டுநர் உடனடியாக கீழே இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள சிமெண்ட் மூட்டைகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.