பிரசித்தி பெற்ற கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் புகழ்பெற்ற ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு ஆதி கேசவப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இந்த கொடியேற்றத்திற்கான கயிறு ஆற்றூர் பள்ளிக்குழிவிளை தர்மசாஸ்தா ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்டது. இந்த கயிறுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேள தாளம் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்றத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 7-ஆம் தேதி நாராயணீய பாராயணம், சாமி பவனி, விப்ர நாராயணர் ராமானுஜதாசன் வழங்கும் ஆன்மீக சொற்பொழிவு, ருக்மணி சுயம்வர கதகளி ஆகியவை நடைபெறும். அதன்பிறகு ஏப்ரல் 10-ஆம் தேதி கிருஷ்ணன் கோவில் கொடியேற்ற திருவிழா நடைபெறும். இதனையடுத்து ஏப்ரல் 13-ஆம் தேதி துரியோதன வதம் கதகளி நிகழ்ச்சியும், ஏப்ரல் 14-ஆம் தேதி சுவாமி பவனி வருதல், கருட வாகனத்தில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், ஏப்ரல் 15-ஆம் தேதி சாமி பவனி வருதல், திருவனந்தபுரம் அரசு குடும்ப பிரதிநிதி, துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதையுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் கிருஷ்ண சாமியை பக்தர்கள் படைசூழ பாராட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும் பொதுமக்களும் இணைந்து செய்துள்ளனர்.