கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ஏ.ஜி.ஆர்.நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பேபி என்ற சசிகலா(35) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மொபட்டில் வந்த சசிகலா திடீரென நுழைவு வாயில் அருகே வைத்து பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார்.
இதனை பார்த்த பாதுகாப்பு போலீசார் உடனடியாக சசிகலாவை தடுத்தி நிறுத்தி அவரிடம் இருந்த பெட்ரோலை மீட்டு தண்ணீரை எடுத்து ஊற்றினார். இதன்பிறகு சசிகலாவை முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சசிகலாவிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் நகராட்சி 13-வது வார்டில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ஜெயந்தி என்பவர் போட்டியிட்டுள்ளார்.
அவருக்கு ஆதரவாக சசிகலா செயல்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்கள் சசிகலாவிடம் கொலை மிரட்டல் மற்றும் காவல்நிலையத்தில் பொய் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சசிகலா தீக்குளிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.