ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் மோகனவண்ணன். இவர் ஜவுளி ரகங்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இலங்கையிலிருந்து அப்துல் அஸ்ரப் முகமது ரஹிம் என்பவர் ஜவுளிகள் வாங்குவதற்காக மோகனவண்ணனை தொடர்புகொண்டு கடந்த வருடம் அக்டோபர் மாதம் காசோலை மூலம் இரண்டு தவணையாக 41 லட்சத்து 432 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பணத்திற்கு ஏற்ற ஜவுளிகளை மோகனவண்ணன் அனுப்பவில்லை.
மோகனவண்ணன் ஜவுளிகளை அனுப்பாமல் இருந்ததால் ஏமாற்றமடைந்த அப்துல் அஸ்ரப் முகமது ரஹீம் இந்திய தூதரகத்தின் உதவியுடன் போலீசாருக்கு இமெயிலில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனவண்ணனை தேடி வந்தனர். இந்நிலையில் முன்ஜாமீன் பெறுவதற்காக மோகனவண்ணன் சென்னைக்கு சென்றது தெரியவந்தது. உடனடியாக சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உத்தரவின்படி சென்னைக்கு சென்று மோகனவண்ணனை கைது செய்து வந்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.