Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

”தேர்வுகளுக்கு கால்குலேட்டர் அனுமதி” CBSC அதிரடி உத்தரவு …!!

கற்றல் குறைபாடுள்ள 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ வழி மாணவ மாணவிகள் தங்களது பொதுத்தேர்வின் போது கால்குலேட்டர் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ வழியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இந்நிலையில், கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்தி தங்களது தேர்வினை எழுதலாம் என்று மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஎஸ்இ-யின் தேர்வுகள் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட அறிவிப்பில், “மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ன் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிபிஎஸ்இ பல்வேறு சலுகைகளையும் உதவிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், கற்றல் திறன் குறைபாடுடைய, குறிப்பாக ‘டிஸ்கால்குலியா’ எனப்படும் எண்கள் மற்றும் கணிதத்தை இயல்பிலேயே கற்கும் ஆற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் வசதிக்காக எளிய கால்குலேட்டர்களை பயன்படுத்தும் முறையை இந்தாண்டு முதல் சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தவுள்ளது.” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “இத்தகைய வசதியைப் பெறவிரும்பும் மாணவர்கள் தங்களது பள்ளிகளில் வரும் ஜனவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்களின் விண்ணப்பத்தை ஆய்வு செய்து அந்தந்த பள்ளிகளின் முதல்வர்கள் சிபிஎஸ்இ மண்டல அலுவலகங்களுக்கு பரிந்துரை கடிதங்களை பிப்ரவரி 2-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்களின் கடிதங்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு கால்குலேட்டர் பயன்படுத்துவதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படும். இதற்கான அனுமதிச்சீட்டு பெறாதவர்கள் அக்கருவியை பயன்படுத்துவதற்கு சிபிஎஸ்இ அனுமதிக்காது.” என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 30 வரை நடக்கவுள்ளன. பத்தாம் வகுப்பு முக்கிய பாடங்களின் தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் மார்ச் 18 வரையும், பன்னிரெண்டாம் வகுப்புக்கான முக்கிய பாடங்களின் பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 22 முதல் மார்ச் 30 வரையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |