மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % முன்னுரிமை அடிப்படையிலான ஒதுக்கீடு மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது கடந்த 2020-2021ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 % ஒதுக்கீடு வழங்கப்பட்டது. நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சென்ற வருடங்களின் மாணவர் சேர்க்கை விவரங்களின் அடிப்படையில் அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்க்கை பெற்றுவந்த நிலையில், இந்த சூழல் மாற்றப்பட வேண்டுமென்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தேன்.
அதன்படி அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்கிட டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அளித்த அறிக்கையின்படி தமிழக அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் 7.5 % இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய அரசால் 2021-ம் வருடம் “இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம்” இயற்றப்பட்டது. அதன்பின் 7.5 % முன்னுரிமை அடிப்படையிலான பொறியியல் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று “அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 % இடஒதுக்கீடு வாயிலாக தொழிற் கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவர்களுடைய, அதாவது பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய தொழிற்கல்விப் படிப்புகளுக்கு ஆகக்கூடிய செலவு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த அரசு ஏற்றுக்கொள்ளும்” என்ற அறிவிப்பினை நான் வெளியிட்டேன்.
அந்த அறிவிப்பினை அடுத்து உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு இதற்குரிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி படிப்புக் கட்டணம் வழங்குவதற்காக 45 கோடியே 61 லட்சம் ரூபாயும், விடுதிக் கட்டணத்திற்காக 25 கோடியே 32 லட்சம் ரூபாயும், போக்குவரத்துக் கட்டணத்திற்காக, 3 கோடியே 35 லட்சம் ரூபாயும் மொத்தம் 74 கோடியே 28 லட்சம் ரூபாய் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 7 ஆயிரத்து 876 மாணவர்கள் சேர்க்கை ஆணை பெற்றுள்ளார்கள். 17/02/2022 வரை 6,100 மாணவர்களுக்கான கட்டணமாக 38 கோடியே 31 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நிலையில் 7.5 % இடங்கள் முன்னுரிமை அடிப்படையிலான அரசு ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு, இருதரப்பு வாதுரைகளும் முடிவுபெற்று நமக்கு சாதகமான தீர்ப்பு வெளியாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு தரவுகளின் அடிப்படையிலும், முறையான கலந்தாலோசனை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட முன்னுரிமை அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கும் உயர்நீதிமன்றம் தந்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம் ஆகும். இந்த அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 10 மாத காலத்தில் சமூகநீதிக்கான சட்டப்போராட்டத்தில் கிடைக்கும் 3-வது வெற்றி இத்தீர்ப்பு என்பதைப் பெருமையுடன் பதிவு செய்கிறேன். சமூகநீதியை மக்கள் மன்றம் மற்றும் நீதிமன்றத்தில் நிலைநாட்டி நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை தமிழகம் தொடர்ந்து செய்திடும். ஆகவே திராவிடமாடல் ஆட்சி, அதற்காக அயராது பாடுபடும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.