முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ள முல்லைவேந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தர்மபுரி மாவட்ட திமுக அரசியலில் மிக முக்கிய நபராக திகழ்பவர் முல்லைவேந்தன் இவர் தனது வாழ்வை பள்ளி ஆசிரியராக தொடங்கி பின்னாளில் மேடைப்பேச்சில் வல்லவராகத் திகழ்ந்தவர் இதனால் திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர் பதவி வரை உயர்ந்துள்ளார்.
இந்நிலையில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக படுதோல்வியடைந்தது. தோல்விக்கான காரணம் கேட்டு முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனுக்கு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அதற்கு முறையான பதில் அளிக்காத காரணத்தால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பின், 2016-ம் ஆண்டு தேமுதிகவில் இணைந்து கொள்கை பரப்புச் செயலாளராக உயர்ந்தார். ஆனால், அங்கும் நீண்ட காலம் தாக்குப் பிடிக்கவில்லை. மேலும் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது, பார்க்க வந்த முல்லைவேந்தன், ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தன்னை மீண்டும் திமுகவில் இணைத்துக்கொண்டார். ஆனால், பொறுப்புகள் ஏதும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது ,தனது ஆதரவாளர்கள் சுமார் 5,000 பேருடன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அதனையடுத்து அதிமுக உறுப்பினராக மட்டுமே வலம் வந்துக்கொண்டிருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவருக்கு ஆதரவு தெரிவித்து நேரில் சென்ற முல்லைவேந்தன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் அதோடு ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 5 அன்று தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு தமிழக அரசு சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முல்லைவேந்தன், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு, தருமபுரி மாவட்ட திமுகவில் ஆண்மையுடையவர்கள் யாரும் இல்லை என்பதால் தான் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இம்மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பேசியுள்ளார்.
அதோடு, ’திருவண்ணாமலை திருடன்’ தருமபுரி வந்துச் செல்வதற்காக அரூர் – தருமபுரி நான்கு வழிச்சாலை போடப்படுவதாக அமைச்சர் ஒருவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சரை ஒருமையில் பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருமபுரி மாவட்ட திமுக சார்பில் நகர காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முல்லைவேந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.