கார் மோதிய விபத்தில் மரத்தடியில் அமர்ந்திருந்த விவசாயி பலியான நிலையில் தம்பதியினர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோத்திராபட்டி பகுதியில் பொய்யான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான தியாகராஜன் என்பவருடன் மகனுக்கு பெண் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மூன்று பேரும் அனுமான் கோவில் அருகே இருக்கும் சாலையோர மரத்தடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளனர்.
அப்போது புதுக்கோட்டை நோக்கி வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தடியில் அமர்ந்திருந்த 3 பேர் மீதும் பயங்கரமாக மோதி வனப்பகுதிக்குள் இறங்கியது. இதில் படுகாயமடைந்த தியாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொய்யான் மற்றும் செல்லம் ஆகிய 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தியாகராஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கார் ஓட்டுநர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.