திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வது வழக்கம். அதிலும் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள். வருகிற 15, 16 தேதிகளில் சித்ராபவுர்ணமி வர உள்ளது. இதனால் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது . தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதி அனைத்தையும் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வருகிற 15 மற்றும் 16 தேதிகளில் 15 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முக கவசம் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் அனுமதி வழங்கியுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.