முதன்முறையாக சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக அனைத்து நாடுகளிலும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தற்போது தொற்று பரவல் குறைந்து வந்தது. ஆனால் தற்போது சீன நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா அதிகம் பரவி இருக்கும் ஷாங்காய்நகரமே முழுமையாக முடங்கியுள்ளது.
இந்நிலையில் சீன நாட்டின் ஷாங்காய்நகரில் வைரஸ் பரவலை திறம்பட கையாள தவறிவிட்டதாகக் சொல்லி 3 அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கை முறையாக கையாளவில்லை எனக்கூறி மன்னிப்பு கோரியுள்ள அதிகாரிகள், உணவுப்பொருட்கள் விநியோகத்தை மேம்படுத்துவதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு சீன அரசாங்கத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும் மாவட்ட மற்றும் நகர அளவிலான அதிகாரிகள் ஆவர்.
சீனாவில் இதுவரையிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறியதாக 12-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இவ்வாறு பணி நீக்கத்திற்கு ஆளாகும் அனைத்து அதிகாரிகளும் நகர மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளே ஆவர். மைய அரசு அதிகாரிகள் யாரும் இது போன்ற நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவில்லை. ஷாங்காயில் இன்று ஒரு நாளில் மட்டும் 21,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 824 நபர்களுக்கு மட்டுமே அறிகுறிகள் இருக்கின்றன. ஷாங்காயில் இதுவரையிலும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி இருக்கிறது. ஒருபுறம் தீவிர கட்டுப்பாடுகள் இருந்தாலும் தொற்று பரவல் குறையாமல் உள்ளது சீனாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.