மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.
கடந்த திங்கட்கிழமை மங்களூர் விமான நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த கருப்பு நிற பை ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆளில்லாத மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கபட்டன.
விமான நிலைய சிசிடிவி காட்சிகளின்படி ஆட்டோவில் வந்து இறங்கிய தொப்பி அணிந்த நபர் கருப்பு பையை வைத்து விட்டு சென்றது காட்சிகளில் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், ஆதித்யா ராவோ என்ற அந்த நபர் இன்று தாமாக முன்வந்து காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.