குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்குந்தா பகுதியில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் லோகேஸ்வரன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் வடக்கு சூரங்குடி பகுதிக்கு சென்றுள்ளார். இவர் குளிப்பதற்காக சின்னகுளத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் லோகேஸ்வரன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் நாகர்கோவில் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் குளத்துக்குள் இறங்கி லோகேஸ்வரனை தேடியுள்ளனர். அப்போது லோகேஸ்வரன் குளத்திலிருந்து பிணமாக மீட்கப்பட்டார். அதன்பிறகு லோகேஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஈத்தாமொழி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.