மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் காந்தியடிகள், நேரு, அம்பேத்கார், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கருத்துக்கள் மற்றும் சமூக சிந்தனையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.
இதனையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு 5 ஆயிரம் ரூபாயும், 2-வது பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், 3-வது பரிசாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து அவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு பரிசு வழங்கப்படும். மேலும் போட்டி நடைபெறும் நாள் குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.