தஞ்சையில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் சிபிஎஸ்இ பள்ளியில் உரிய அனுமதி பெறாமல் விடுதி நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வருமான வரித்துறை சோதனையின்போது மாணவ மாணவிகள் விடுதியில் இருந்து வேறு இடத்திற்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வேலம்மாள் சிபிஎஸ்இ பள்ளியில் உரிய அனுமதி இன்றி விடுதி நடத்தி வருவதாக வந்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் விடுதியில் சோதனை செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை அறிந்த நிர்வாகம் அந்த விடுதியில் தங்கியிருந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை அவசர அவசரமாக பள்ளி வாகனத்தில் ஏற்றியதோடு ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.
இந்த தகவல் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று முழுவதும் மாணவர்களுக்கு சரியாக உணவு கூட வழங்காத நிர்வாகம், இன்று பள்ளி வகுப்புக்கு கூட மாணவர்களை அனுப்பவில்லை.
இதையடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிய வர கல்வி நிறுவனத்தை தொடர்பு கொண்டு மாணவர்கள் வைத்திருக்கப்பட்ட இல்லத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கேயும் மாணவர்கள் இல்லாமல் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். தற்போது கூட்டிச் செல்லப்பட்ட மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் தெரியாமல் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.