தன்னைத்தானே கடவுளாக அறிவித்துக்கொண்டு ஆசிரமம் நடத்திவந்தவர் நித்யானந்தா. இவர் மீது பாலியல் வழக்கு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. இதற்கிடையில் அகமதாபாத் ஆசிரமத்தில் இரண்டு சிறுமிகள் மாயமானார்கள்.இதுதொடர்பாக அச்சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து நித்யானந்தாவை தேடிவந்தனர். இந்நிலையில் நித்யானந்தா ஈகுவடார் அருகில் கைலாசம் என்ற இந்து நாட்டை உருவாக்கிவிட்டார் என்று தகவல்கள் வெளிவந்தன.
இதையடுத்து அவரை கைது செய்ய குஜராத் காவலர்கள் சர்வதேச காவலர்களின் உதவியை நாடினர். அவருக்கு எதிராக சர்வதேச அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் சர்வதேச போலீசார், சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளு கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இந்த நோட்டீஸ்கள், குற்றவாளிகள் அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் இருப்பிடம் மற்றும் அவர் குறித்த கூடுதல் தகவல்களை அறிந்துக்கொள்ள அளிக்கப்படும் ஒருவகை விசாரணை அழைப்பு ஆகும். இதன்மூலம் சர்வதேச நாடுகளும் நித்யானந்தா குறித்த தகவல்களை அளிப்பார்கள்.
இதனால் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளிவரும். இந்த வழக்கு தொடர்பாக அகமதாபாத் நகர காவல் கண்காணிப்பாளர் கே.டி. கமாரியா கூறும்போது, “நித்யானந்தாவின் அகமதாபாத் ஆசிரமத்திலிருந்து இரண்டு சிறுமிகள் மாயமாகி உள்ளனர். இதுதொடர்பாக அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரமத்திலுள்ள குழந்தைகள் நன்கொடை வசூலிக்கவும் அனுப்பப்பட்டுள்ளனர். அவருக்கெதிராக சர்வதேச போலீசார் ரெட் கார்னர் (சிவப்பு) நோட்டீஸ் வழங்க முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம்” என்றார்.
சர்வதேச போலீசார் அளிக்கும் ரெட் கார்னர் நோட்டீஸ், “சட்டவிரோத குற்றங்களில் ஈடுபட்ட நபர்களின் இருப்பிடத்தை அறிந்து, அவர்கள் வெளிநாடுகளில் பதுங்கியிருந்தாலும் கூட அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ள சட்ட நடவடிக்கைக்கு பரிந்துரைக்கும்” என்பது குறிப்பிடத்தக்கது.