Categories
தேசிய செய்திகள்

நெகிழி இல்லா துர்க்கை கோயில்!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவை நெகிழி இல்லா நகரமாக மாற்றும் நோக்கில், அங்கு பிரசித்தி பெற்ற கனக துர்க்கை கோயில் நிர்வாகம் கோயில் வளாகத்தில் நெகிழிக்கு தடை விதித்துள்ளது.

கிருஷ்ணா நதி கரையோரத்தில் உள்ள இந்திரகிலாட்ரி மலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற துர்க்கை அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றனர். அவர்கள் கோயிலுக்குள் நெகிழியை கொண்டுவரக்கூடாது என கோயில் நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை மீறும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதியை நெகிழியற்ற தூய்மையான நகராக மாற்ற அரசு, தொண்டு நிறுவனங்கள், சூழலியல் ஆர்வலர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நகரின் முக்கிய சுற்றுலாத் தளமான கனக துர்க்கா கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கனோர் வருவதால், விழா காலங்களில் நெகிழி பயன்பாடு வெகுவாக உயர்வது வழக்கம்.

பெரும்பாலான பக்தர்கள் பூஜை பொருட்களை நெகிழி பைகளில் கொண்டுவந்த நிலையில், தற்போது துணிப்பைகள் மட்டுமே கொண்டுவர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கோடீஸ்வரம்மா என்பவர் கோயிலின் நிர்வாக அலுவலராக இருந்தபோது, அம்மனுக்கு காணிக்கையாக வரும் துணிகளில் இருந்து துணி பைகளை தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுத்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக அந்தத் திட்டம் தோல்வியடைந்தது.

தற்போதைய நிர்வாக அலுவலரான சுரேஷ் பாபு, திட்டத்தை அறிவிக்கும் முன்னரே தேவையான அளவுக்கு துணி பைகளை தயாரித்து வைத்துவிட்டார்.

கோயிலில் துணி பைகள் விற்பனைக்கு உத்தரவிட்டுள்ள சுரேஷ் பாபு, இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைபடுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோயிலில் பூஜை சாமான்கள் விற்கும் பகுதியில் தற்போது நெகிழி பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கோயில் நிர்வாகம், வியாபாரிகள், பக்தர்கள் என அனைவரும் இணைந்து விஜயவாடாவை நெகிழி இல்லா நகரமாக்கும் முன்னெடுப்பு, நீண்ட காலத்திற்கு நல்ல பலனை தரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Categories

Tech |