சுவிட்சர்லாந்தில் சூரிச்சுக்கு வடகிழக்கில் உள்ள Winterthur என்ற நகரில் வசித்து வரும் 50 வயது பெண் ஒருவர் சம்பவத்தன்று குளியலறையிலிருந்து அலறியுள்ளார். இந்த அலறல் சத்தத்தை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ள குளியலறையில் தண்ணீர் வெளியேறும் துவாரத்துக்குள் அந்தப் பெண் தன்னுடைய விரல் சிக்கிக்கொண்டதால் உதவி கோரி சத்தமிட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் சோப் உதவியுடன் அந்த பெண்ணின் விரலை வெளியேற்ற முயற்சி எடுத்தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியை சந்தித்ததால் தீயணைப்புத் துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு தீயணைப்பு துறையினர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போராடி அந்த பெண்ணின் விரலை பத்திரமாக விடுவித்துள்ளனர்.