எச்.ராஜா மீது கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் அருகே இருக்கும் மேற்பனைக்காடு கிராமத்தில் அறக்கட்டளை என்ற பெயரில் வழிபாட்டுத் தலத்தை கட்டியுள்ளார் முகமது அலி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் போராட்டம் ஊர்வலமாக நடந்த நிலையில் வருகிற 13ம் தேதிக்குள் வழிபாட்டுத்தலம் அகற்றப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா எழுதிக்கொடுத்தார்.
இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தின்போது எச்.ராஜா தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சர், வைத்திய நாதன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளைப் பற்றி அவதூறாக பேசியதற்காக ராஜாவின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட செயலாளர் கவிவர்மன் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மேற்பனைக்காடு ஜமாத் நிர்வாகத்தினர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன்பு எச்.ராஜா மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாதநிலையில் தற்போது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர். ராஜா மீது அடுத்தடுத்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் போராட்டத்தின் போது எடுத்த வீடியோக்களை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றார்கள்.