Categories
மாநில செய்திகள்

பயணியின் உயிரைக் காத்த ரயில்வே காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், வண்டியிலிருந்து ஒரு பயணி தவறி கீழே விழும் நேரத்தில், அங்கிருந்த காவலர் ஒருவர் பயணியை லாவகமாக உள்ளே தள்ளி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் குறித்த காணொலி இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

தொடர்வண்டியிலிருந்து கீழே விழும் பயணியை காவலர் ஒருவர் காப்பாற்றும் காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6:45 மணிக்கு எட்டாவது நடைமேடையிலிருந்து, தாதர் விரைவு தொடர்வண்டி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாகப் பயணி ஒருவர் ஓடிவந்து ஏற முயன்றார். அப்பொழுது அவர் தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கு இடையே விழும் சந்தர்ப்பத்தில், இதனைக் கவனித்து கொண்டிருந்த காவலர் ஒருவர் ஓடிவந்து பயணியை காப்பாற்றினார்.

தக்க சமயத்தில் காவலரின் துரித செயல்பாடு பயணியின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது. காப்பாற்றப்பட்ட அந்தப் பயணியும் உடனடியாக வண்டியில் இருந்தபடியே காவலருக்கு இரு கைகளையும் கூப்பி தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.

ஓடும் வண்டியில் பயணிகள் ஏற வேண்டாம் என்று ஏற்கனவே தொடர்வண்டி நிலையங்களில் ஒலிபெருக்கி மூலமாகப் பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவந்தாலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறபோது விலைமதிப்பற்ற உயிரை இழக்க நேரிடுகிறது. எனவே பொதுமக்கள் இது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது பயணியைக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் விஜயகுமாருக்கு ரயில்வே பயணிகளும், அலுவலர்களும், சமூக வலைதளங்களில் பொதுமக்களும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

Categories

Tech |