தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதாவது அமைச்சர் ஆர்.சக்கரபாணி, “மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறந்த நியாய விலை கடை எடையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். நியாய விலை கடை விற்பனையாளர்கள் பொது விநியோகத் திட்டம் சீராக செயல்படுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். விற்பனையாளர்களின் ஈடுபாட்டையும் செயல்திறனையும் மேம்படுத்தும் வகையில் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் அளிக்கப்படும். பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையில் பணியாற்றும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு ஒவ்வொரு வருடமும் மாவட்ட அளவில் 2 நிலைகளிலும், மாநில அளவில் 3 நிலைகளிலும் பரிசுகள் வழங்கப்படும்.
அதில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் விற்பனையாளர்களுக்கு ரூபாய் 4 ஆயிரமும், இரண்டாம் பரிசு பெறுபவருக்கு ரூபாய் 3 ஆயிரமும் வழங்கப்படும். அதேபோல் முதல் பரிசு பெறும் எடையாளர்களுக்கு ரூபாய் 3 ஆயிரமும், இரண்டாம் பரிசு பெறுவோருக்கு ரூபாய் 2 ஆயிரமும் வழங்கப்படும். அதனைப் போலவே மாநில அளவில் முதல் பரிசு பெறும் விற்பனையாளர்களுக்கு ரூபாய் 15 ஆயிரமும், இரண்டாம் பரிசு பெறுபவருக்கு ரூபாய் 10 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெறுபவருக்கு ரூபாய் 5 ஆயிரமும் வழங்கப்படும்.
அதோடு முதல் பரிசு பெறும் எடையாளர்களுக்கு ரூபாய் 10 ஆயிரமும், இரண்டாம் பரிசு பெறுபவருக்கு ரூபாய் 6 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெறுபவருக்கு ரூபாய் 4 ஆயிரமும் வழங்கப்படும். ஒரு மாவட்டத்திற்கு ரூபாய் 3 ஆயிரம் வீதமும், மாநில அளவில் சான்றிதழ் மற்றும் இதர செலவிற்கு ரூபாய் 15 ஆயிரமும் வழங்கப்படும். இதற்கு மொத்த செலவினம் ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் அரசுக்கு ஏற்படும்” என்று கூறியுள்ளார்.