விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள சிந்தலவாடி பகுதியில் விவசாயியான சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சண்முகசுந்தரம் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சண்முகம் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக சண்முக சுந்தரத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.