கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் சர்க்கரை குளத்தெருவில் பஞ்சமுக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது பற்றி கோவில் பூசாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் சட்டை அணியாத ஒரு நபர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனையடுத்து விருத்தாசலம் சாலையில் இருக்கும் சாய்பாபா கோவில் அருகாமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக கேமராவில் பதிவாகியிருந்த நபர் வந்ததைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் ரமேஷ் என்பதும், இவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் இருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியது ரமேஷ் ஒப்புக்கொண்டார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்துள்ளனர்.