குடோனில் பதுக்கி வைத்த 7960 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் கணபதி நகரில் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் நேற்று மாலை குடோனுக்கு துணை சூப்பிரண்டு போலீஸ் சுதர்சனம், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் உள்ளிட்டோர் தலைமையிலான போலீஸார்கள் சென்றனர்.
சோதனை செய்தபோது அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 40 கிலோ எடை கொண்ட 199 ரேஷன் அரிசி மூட்டைகள் மொத்தமாக 7960 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மினி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுப்பற்றி விசாரணை செய்தபோது குடோன் வாடகைக்கு எடுத்து ரேஷன் அரிசியை மாவாக்கி வெளியூர் சந்தைகளில் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோனில் இருந்து தப்பி ஓடிய அன்வரை தேடி வருகின்றார்கள்.